‘ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் வருவதுபோன்று, மனிதரைச் சுமந்தபடி பறக்கும் மின்சாரப் பலகையை உருவாக்கி சீன இளைஞர் அசத்தியுள்ளார்.
ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் காணொலி படைப்பாளர் ‘அமேசிங் அயு’, சிறுவயதில் பார்த்த ‘கிரீன் காப்ளின்’ கதாபாத்திரத்தின் பறக்கும் பலகையால் ஈர்க்கப்பட்டார். அதேபோன்ற சாதனத்தை உருவாக்க இயந்திரவியல், விமானத் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தானாகக் கற்றுக்கொண்டார்.முதலில் ஐந்து சிறிய ஜெட் என்ஜின்களுடன் பலகையை வடிவமைத்தார். ஆனால், சோதனையின்போது தீப்பிடித்ததில் எரிபொருள் குழாய்களும் மின்சுற்றுகளும் சேதமடைந்தன.
முயற்சியைக் கைவிடாமல், பத்து மின்சாரச் சுழலிகளுடன் புதிய பலகையை உருவாக்கினார். இவை சுமார் 300 கிலோ எடைக்குச் சமமான உந்துவிசையை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும்போது உடலைச் சமநிலையில் வைத்திருக்க இரண்டு கைப்பேசிகளுடன் செயற்கை நுண்ணறிவு உதவி அமைப்பைப் பயன்படுத்தினார். ஒரு கைப்பேசி பலகையின் சாய்வு உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கிறது.
அந்தத் தகவல்களின் அடிப்படையில், உடல் எடையை எந்தப் பக்கம் மாற்ற வேண்டும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு காதொலி வழியாக அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு பயிற்சிக்குப் பிறகும் மேம்பாட்டு ஆலோசனைகளையும் வழங்குகிறது. பத்து நாட்களுக்கும் மேலான பயிற்சிக்குப் பிறகு, அந்தரத்தில் நிலையாக நிற்பதையும் நேராகப் பறப்பதையும் அயு கற்றுக்கொண்டார். சுமார் இரண்டு மாத உழைப்பில் இந்தப் பலகை உருவானது.
ஷாங்காயில் நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்ச்சியில், தனது பலகையில் பறந்தபடி மேடைக்கு வந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். சிறுவயதில் திரையில் பார்த்த காட்சியை, தனது விடாமுயற்சியால் நேரில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.